காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த இ-குற்றப்பத்திரிகை, சிறப்பு நீதிபதி அஜய் குமார் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் வழக்கமான செயல்பாடுகளை தொடங்கியதும், குற்றப்பத்திரிகை நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு சிறப்பு நீதிபதி அஜய் குமார் அறிவுறுத்தினார்.
சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரைத் தவிர கார்த்தி சிதம்பரத்தின் பட்டய கணக்காளர் பாஸ்கரராமன் உள்ளிட்ட பலரது பெயர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஐ.என்.எக்ஸ். மீடியாவில் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்க சிதம்பரம் லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட இந்த வழக்கில், சிதம்பரம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து, அக்டோபர் 16ஆம் தேதி அமலாக்கத்துறை அவரை கைது செய்தது.
சிபிஐ தொடர்ந்த வழக்கில் அக்டோபர் 22ஆம் தேதியும், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 4ஆம் தேதியும் சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைத்ததையடுத்து அவர் திகார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: மத்தியப் பிரதேச இடைத்தேர்தல்: பிரசாந்த் கிஷோரின் உதவியை நாடும் காங்கிரஸ்