யெஸ் வங்கியில் பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கடன்கள் சரியான முறையில் திருப்பி செலுத்தப்படாததால், வங்கியில் செயல்படாத சொத்துகள் (என்.பி.ஏ.) பெருமளவு அதிகரித்தது. இதனால் வங்கியை இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இதுதொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவின் பேரில் விசாரணை நடந்துவருகிறது. முன்னதாக மார்ச் மாதம் யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் மீதான விசாரணை மும்பையிலுள்ள பணமோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
இந்நிலையில் யெஸ் வங்கியின் மூலம் காக்ஸ் அண்ட் கிங்ஸ் குழுமம் சார்பாக 3 ஆயிரத்து கோடி ரூபாய் பெற்ற கடன் திருப்பி செலுத்தப்படவில்லை என்பது தெரியவந்தது. இந்நிலையில் காக்ஸ் அண்ட் கிங்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலர் அனில் கண்டேல்வால் அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணையில், வெளிநாட்டு துணை நிறுவனங்களின் இருப்புநிலைகளை கையாளுவதன் மூலம் காக்ஸ் அண்ட் கிங்ஸ் நிறுவனம் ஒருங்கிணைந்த நிதிகளை உருவாக்கியது என்று யெஸ் வங்கி வழக்கில் தெரியவந்தது. அதே போல் அந்த நிறுவனத்தால் கடன் தொகை வாங்குவதற்கு கொடுக்கப்பட்ட சில பத்திரங்கள் போலியானவை என தெரியவந்தது.
மேலும் காக்ஸ் அண்ட் கிங்ஸ் நிறுவனத்தின் உள் தணிக்கையாளர் நரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் இருவரும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: யெஸ் வங்கி முறைகேடு வழக்கில் வாதவாண் சகோதர்களுக்கு ஜாமீன்