கொல்கத்தா: பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி (43) நேற்று முன்தினம் (ஜன.2) நெஞ்சுவலி காரணமாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் அவரது இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து ரத்த குழாயினை விரிவுபடுத்துவற்காக முதல்கட்டமாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அவரது உடல்நிலையைப் பொறுத்து, மேலும் ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொள்ளப்படும் என மருத்துவர்கள் முன்னதாகத் தெரிவித்திருந்தனர். மேலும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், கங்குலியின் இதய செயல்பாடு குறித்து பரிசோதிக்க இன்று(ஜன.04) எக்கோ கார்டியோ கிராஃபி மேற்கொள்ளப்படவுள்ளதாக, அம்மருவத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவருக்கு அளிக்கவுள்ள மருத்துவ சிகிச்சை தொடர்பாக, அவரது குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசிக்கவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கங்குலிக்கு இதய அறுவை சிகிச்சை தேவையில்லை - மருத்துவர்கள்