தமிழ்நாட்டில் காலியாகவுள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல், ஜூலை 18ஆம் தேதி, நடத்தப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில், இதுகுறித்த அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, வேட்புமனு தாக்கல் ஜூலை-1 தேதி தொடங்கும் என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய ஜூலை 8ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 9ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும் வேட்புமனுக்கள் திரும்பப்பெற ஜூலை 11ஆம் தேதி இறுதி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சட்டப்பேரவை குழு அறையில் நடைபெறவுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை அன்று மாலை 5 மணிக்கே நடைபெறும் என்றும், தேர்தல் முடிவுகள் ஜூலை 22ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் நடத்தும் அலுவலராக சட்டப்பேரவை செயலாளர், சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுவை இவர்களுள் ஒருவரிடத்தில் தலைமைச் செயலகத்தில் உள்ள அவர்களுடைய அலுவலகத்தில் 11 மணிக்கு மேல் 3 மணிக்குள் சென்று சமர்ப்பிக்கலாம்.
மேலும், ஜூலை 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று வேட்புமனுக்கள் அளிக்க முடியாது என்றும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.