இந்தியப் பாதுகாப்புத் துறை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில் அதிநவீன ஏவுகணைகள் மற்றும் போர் ஆயுதங்களின் உருவாக்கத்துக்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன மேம்படுத்தப்பட்ட ’பினாக்கா’ வான்வழி தாக்குதல் தடுப்பு ஏவுகணை ஒடிசாவில் உள்ள பலசோர் கடல் பகுதியில் இன்று(நவ-4) பரிசோதிக்கப்பட்டது. இதற்கான சோதனையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நடத்தியது. இலக்கைக் குறிவைத்து வழிநடத்தும் தொழில்நுட்பம் கொண்ட இந்த ஏவுகணைகள், அதற்கான இயந்திரத்திலிருந்து ஏவப்பட்டன.
மொத்தம் ஆறு ஏவுகணைகள் தொடரில் ஏவப்பட்டன. இவை 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்கை தாக்கி வெற்றிகரமாக அழித்ததாகப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. சிவபெருமானின் வில் பெயரிடப்பட்ட பினாக்கா ஏவுகணைகள், ஏற்கனவே ராணுவத்தில் உள்ள பல ஏவுகணை அமைப்புகளின் ஒரு பகுதியாகும், இவை சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
பினாக்கா முற்றிலுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு ஏவுகணை ஏவும் அமைப்பு, கடந்த 20 வருடங்களாக ராணுவத்தில் செயல்பாட்டில் உள்ளது. இவ்வகை ஏவுகணைகளால் ஒரு பெரிய நிலப்பரப்பை மொத்தமாக அழித்துவிட முடியும், ஒவ்வொரு ஏவுகணையிலும் சுமார் 200 கிலோ வெடிபொருள்கள் வைத்து ஏவ முடியும், 44 வினாடிக்குள் சுமார் 12 ஏவுகணைகளை ஒரே இடத்தில் ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.