ராணுவம், விண்வெளி, கடற்படை உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதனை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றிவருவது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.). இதன் தலைமையகம் டெல்லியில் செயல்பட்டுவருகிறது. இந்த அமைப்பின் உணவு ஆராய்ச்சிக் கூடம் மைசூரில் செயல்பட்டுவருகிறது.
விண்வெளிக்கு மனிதர்களை ஏற்றிச்செல்லும் ககன்யான் திட்டத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதுகுறித்து உணவு ஆராய்ச்சி கூடத்தில் பணிபுரியும் விஞ்ஞானி ஜெகன்நாத் கூறுகையில், "விண்வெளியில் புவியீர்ப்பு இல்லாத காரணத்தால் அங்கு உணவு செய்வதும் உண்ணுவதும் கடினமான ஒன்றாக உள்ளது. பூமியிலுள்ள வெப்ப நிலையால் வெந்நீரில் சமைக்க முடியும். தண்ணீரைப் பாக்கெட்களில் அடைத்து விஞ்ஞானிகள் விண்வெளியில் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்வதிலும் சவால் உள்ளது. அதிகமான அழுத்தத்தை கொடுத்தால்தான் அங்கு தண்ணீரை குடிக்க முடியும். புவியீர்ப்பு இல்லாத காரணத்தால் மிச்சம் வைக்கப்பட்ட உணவு, திரவம் ஆகியவை பறக்க வாய்ப்புள்ளது. அது பணிபுரியும் சூழலைக் கெடுக்கும். இவ்வகையான சிக்கல்களைத் தவிர்க்கவே விண்வெளி வீரர்களுக்கென பிரத்யேகமான உணவு தயாரிக்கப்படுகிறது.
இதற்காக இஸ்ரோவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ககன்யான் விண்கலத்தில் பயணம் செல்லவுள்ள விஞ்ஞானிகளுக்கு எவ்விதமான உணவு அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் - முதலமைச்சர் நாராயணசாமி தகவல்