அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் உள்ளிட்டோருடன் 36 மணி நேரம் இந்தியாவில் பயணம் செய்தனர். முன்னதாக அகமதாபாத் நகருக்கு வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சபர்மதி ஆசிரமம், தாஜ் மஹால் உள்ளிட்டவற்றை நேற்று சுற்றிப் பார்த்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு விருந்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப்பும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்தனர். அவரை ராம்நாத் கோவிந்த் வரவேற்றார். ராம்நாத் கோவிந்த், அவரின் மனைவி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மெலனியா ட்ரம்ப் ஆகியோர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

விருந்தில் ட்ரம்புடன், அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்களுக்காக அமெரிக்க சுவையுடன் கூடிய இந்திய உணவு வகைகள் அடங்கிய மெனு தயாரிக்கப்பட்டது. சைவ மற்றும் அசைவத்தை உள்ளடக்கிய உணவுப்பட்டியலில், சால்மன் மீன் டிக்கா, ஆலோ டிக்கி, கீரை சாட் மற்றும் பலவகையான சூப்களுடன் விருந்து இருந்தது.

இதில் ராஷ்டிரபதி பவனின் புகழ்பெற்ற தால் ரைசினா, மட்டன் பிரியாணி, மட்டன் ரான் டிஷ், டம் குச்சி மாதார், புதினா ரைட்டாவும் இனிப்பில் வெணிலா ஐஸ்கிரீமுடன் ஹேசல்நட்-ஆப்பிளையும், ரப்தியுடன் கூடிய மல்புவாவும் பரிமாறப்பட்டது.

இந்த விருந்தில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க...இந்தியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: முக்கிய நிகழ்வுகள் உடனுக்குடன்