மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள இளம் பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் புற நோயாளிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். பின்னர் மேற்கு வங்க அரசு தலையிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதில், வேலை நிறுத்தம் திரும்பப் பெறபட்டது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள இந்து ராவ் மருத்துவமனையில் ஜூன் 29ஆம் தேதி நோயாளியின் உறவினர்கள், மருத்துவரை தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று முதல் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அவசர சேவை மட்டும் செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், "மருத்துவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நிறுத்தப்படும் வரை நாங்கள் வேலைக்கு செல்ல மாட்டோம். அவசர சேவை மட்டும் செயல்படும். நோயாளி ஒருவர் மிகவும் கவலைக்கிடமாக இருந்தார். அவரின் நிலையை உறவினர்களிடம் விளக்கினோம். அதனை அவர்கள் ஏற்காமல் 10-15 நபர்களுடன் வந்து மருத்துவரை தாக்கியுள்ளனர்" என்றார்.