மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி இறந்ததையடுத்து, அவரது உறவினர்கள் அங்கு பணியில் இருந்த பயிற்சி மருத்துவரை தாக்கினர். இதில் படுகாயமடைந்த அந்த இளம் மருத்துவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைக் கண்டித்து அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் மருத்துவர்கள் போராட்டம் செய்தனர்.
அதுமட்டுமல்லாது நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளின் பயிற்சி மருத்துவர்களும் போராட்டத்தில் களமிறங்கினார். இதனால் பெரும்பாலான மருத்துவமனைகளில் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். மேலும் மருத்துவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிக்கும் விதமாக இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
கொல்கத்தாவின் பல்வேறு இடங்களிலும் மருத்துவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருவதாகக்கூறி ராஜினாமா கடிதத்தை அளித்தனர். டெல்லியில் ஒரு மருத்துவர் ஹெல்மெட் அணிந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், ஜூன் 17ஆம் தேதி மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் அரசு, தனியார் என அனைத்து மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும், அவசர சிகிச்சைப் பிரிவை தவிர்த்து பிற பிரிவுகளில் பணிபுரியும், சீனியர், ஜூனியர் என அனைத்து மருத்துவர்களும் இந்த போராட்டத்தில கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.