இந்தியாவில் கரோனா வைரஸ் தலைநகரமாக மகாராஷ்டிரா மாறியுள்ளது. சுமார் ஆயிரத்தை தாண்டிய கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசு தவித்துவருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முழு வீச்சில் நடைபெறுகின்றன. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால், மக்கள் அனைவரும் வீட்டிலே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர், மருத்துவர் வாஜே என்பவரின் நர்சிங் ஹோமில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இச்சூழலில், அப்பெண்ணிற்கு குறிப்பிட்ட நாளிற்கு முன்பே பிரசவ வலி ஏற்பட்டது. குழந்தையின் உடல்நிலையை பரிசோதனை செய்ததில், இதயத் துடிப்பு குறைவாக காணப்பட்டதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவானது. இந்த அறுவை சிகிச்சையின்போது, குழந்தையின் பாதுகாப்பிற்காக மருத்துவர் ராஜேந்திர சந்தோர்கர் என்பவரும் அழைக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து, அப்பெண்ணிற்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை மூலம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. பச்சிளம் குழந்தையின் அழுகை குரலை மருத்துவர்கள் கேட்டுக்கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே, குழந்தையின் உடல் முழுவதும் நீல நிறமாக மாறத் தொடங்கியது.
மேலும், மூச்சு விடுவதற்கு குழந்தை சிரமப்படுவதை பார்த்து, உடனடியாக குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவிற்கு (Neonatal intensive care unit) அழைத்து செல்ல வேண்டும் என மருத்துவர் சந்தோர்கர் தெரிவித்தார். ஆனால், குழந்தையை அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு வாகனங்கள் இல்லாத காரணத்தால் உடனடியாக அவர் தன்னுடைய பைக்கிலேயே பச்சிளம் குழந்தையையும், குழந்தையின் அத்தையையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
இதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் குழந்தையை தீவிர சிகிச்சை பிரவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். தற்போது, குழந்தையின் உடல்நிலை சீராகியுள்ளது.
இதையும் படிங்க: 'கையில் ஒரு கடிதம்... ஸ்கூட்டரில் 1,400 கிமீ பயணம்' - ஊரடங்கில் சிக்கிய மகனை மீட்ட தாயின் அசாத்திய தைரியம்