மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனியாக 52 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது, இதனால் கடந்த முறை போலவே, இந்த முறையும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை அக்கட்சி இழந்துள்ளது.
மேலும், ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான அமேதியில் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். மேலும், மக்களவைத் தேர்தலின் தோல்விக்கு ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொறுப்பேற்றுள்ளார்.
இந்த படுதோல்வியின் காரணமாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் விரக்தி அடைந்துள்ளனர். அதன் வெளிப்பாடாக உத்தரப்பிரதேசம், ஒடிசா மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த தோல்விக்கு பொறுப்பேற்ற ராகுல் காந்தியும் தனது தலைவர் பதவியிலிருந்து விலகுவார் என கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் பேச்சுகள் எழுந்தவந்தன.
இந்நிலையில், இன்று காலை 11 மணி அளவில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில், காங்கிரஸ் தேர்தலில் அடைந்த படுதோல்வி குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
மேலும், ராகுல் காந்தி தலைவர் பதவியிலிருந்து விலகுவாரா இல்லை தொடர்ந்து நீடிப்பாரா என்பதற்கான பதிலும் இக்கூட்டத்தில் கிடைத்துவிடும் என்பதால் காங்கிரஸ் தொண்டர்களிடையே இக்கூட்டத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.