புதுச்சேரி தெற்கு மாவட்டம் திமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிவா, வெங்கடேசன் உள்ளிட்ட திமுகவினர் சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அதில், “புதுச்சேரியில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வாணரப்பேட்டையும், பெரியார் நகரும் புதுச்சேரியில் மொத்த கஞ்சா விற்பனை பகுதிகளாக திகழ்கின்றன. அங்கிருந்து கரப்பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவ, மாணவிகள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இவர்களில் யார், யாரிடம் பணம் புழக்கம் அதிகம் உள்ளது என்பதை கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் கண்டறிந்து, அவர்களிடம் கஞ்சா விற்பனை செய்கிறது. அதன் பின்னர் அவர்களின் நண்பர்களான ஏழை மாணவர்களும் கஞ்சாவிற்கு அடிமையாகிவிடுகின்றனர்.
ரயில் சேவை, பேருந்து சேவை இல்லாத இக்காலகட்டத்தில் வெளிமாநிலங்களிலிருந்து கஞ்சா எவ்வாறு கொண்டு வரப்படுகிறது, எந்த வகையில் புதுச்சேரியில் அனைத்துப் பகுதிகளுக்கும் கஞ்சா கொண்டு செல்லப்பட்டு இளைஞர்களிடம் சேர்க்கப்படுகின்றது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். அதேபோல் இக்குற்றத்திற்கு பின்னணியில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வெளிக்கொண்டு வந்து சமூகத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும். இதற்காக தற்போது காவல் துறையில் ஐபிஎஸ் அலுவலர் தலைமையிலான ஒரு தனிப்பிரிவை உருவாக்கி, கஞ்சா நடமாட்டத்தை நிறுத்துவதற்கான பணியை துரிதப்படுத்த வேண்டும்.
எந்த காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் கஞ்சா புழக்கம் உள்ளதோ, அந்தக் காவல் நிலைய அலுவலர்களையே அதற்கு பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். இப்பணிகளை உடனடியாக மேற்கொண்டு புதுச்சேரியில் கஞ்சா புழக்கத்தை உடனடியாக நிறுத்தி, இளைஞர்களையும், மாணவர்களையும் பாதுகாக்க முன்வர வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கஞ்சா போதையில் தந்தையை தாக்கிய மகன் கைது