திமுக தலைமைக் கழகம் முன்கூட்டியே அறிவித்திருந்தபடி இன்று டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் அக்கட்சி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதில் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி ரத்தை கண்டித்தும் - வீட்டுச் சிறையில் உள்ள அம்மாநில முக்கிய அரசியல் தலைவர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோரை விடுவிக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்தப் போராட்டம் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் நடைபெற்றுவருகிறது. இதில் தயாநிதி மாறன் உள்ளிட்ட திமுக எம்.பி.க்களுடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், அக்கட்சியின் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும், இந்தப் போராட்டத்தில் மதிமுக, ராஷ்ட்ரீய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட 13 கட்சிகள் கலந்துகொண்டுள்ளன.