அமமுகவின் பொதுச்செயலாளர் தினகரன் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஆகியவற்றில் அமமுக தோல்வி அடைந்தது குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் முக்கிய ஆலோசனையில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், அதிமுக ஆட்சியின் தற்போதைய நிலை என்ன, அக்கட்சியின் ஆட்சியை எதிர்த்து அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது உள்ளிட்ட விவரங்களும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
ஏற்கனவே, அதிமுக ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும்போது அக்கட்சிக்கு எத்தனை உறுப்பினர்கள் ஆதரவளிக்கின்றனர் என்பதில் "எங்களது சிலீப்பர் செல்கள் யார் என்று தெரியவரும்" என தினகரன் கூறியுள்ள நிலையில், அதற்கான முன் ஏற்பாடுகள் குறித்தும் சசிகலாவிடம் தினகரன் விவாதித்திருக்க கூடும் என்றும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஜுன் 10ஆம் தேதி பேரவைக் கூட உள்ள நிலையில் சசிகலாவை தினகரன் சந்தித்து பேசியுள்ளதால் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை பேரவை கூட்டத்தின்போது எதிர்பார்க்கலாம் எனக் கூறப்படுகிறது.