தேர்தலுக்கு மாநிலங்கள் நிதியுதவி அளிப்பதற்கு இந்தியத் தேர்தல் ஆணையமானது ஆதரவாக இல்லை என்பதை சில தினங்களுக்கு முன்பு, மத்திய நிதி இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வ பதிலை, சபைக்கு அறிவித்தார். மாநில நிதியுதவிக்கு ஆதரவாக தாங்கள் இல்லை என்று அரசாங்கத்திடம் தேர்தல் ஆணையம் கூறியது எதற்காகவென்றால், மாநிலத்தால் வழங்கப்படும் செலவுகளுக்கு மேல் வேட்பாளர்களின் சொந்த செலவுகள் அல்லது அவர்களுக்காக மற்றவர்கள் செய்யும் செலவுகள் போன்றவற்றை சரிபார்க்க முடியாது என்பதாலேயே ஆகும் என்று அவர் கூறினார்.
இந்த விஷயத்தில், கமிஷனின் பார்வை என்னவென்றால், உண்மையான பிரச்னைகளுக்குத் தீர்வு காண, அரசியல் கட்சிகள் நிதி பெறுவது மற்றும் அந்த நிதியானது எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பன போன்றவைகள் தொடர்பான விதிகளில் தீவிரமான மாற்றங்கள் இருந்தால் மட்டுமே ஒரு முழுமையான வெளிப்படைத்தன்மையை அளிக்கமுடியும் என்பதே ஆகும் என்று அவர் கூறினார். 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பினை அறிமுகப்படுத்திய பின் ஊழலைக் குறைக்கவும், அரசாங்கம் மற்றும் தேர்தல் இயந்திரங்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும் வேண்டி பிரதமர் அளித்த ஆலோசனையான தேர்தலுக்கு மாநில நிதியுதவி வழங்குதல், மக்களவை மற்றும் மாநில சட்டங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துதல் போன்ற ஆலோசனைகளை ஆணையாமானது ஒரு விதத்தில் நிராகரித்துவிட்டது.
இந்திய தேர்தல் ஆணையமானது மாநில நிதியுதவிக்கு எதிரான கருத்தைக் கூறியிருந்தாலும், இந்திய தேர்தல்களில் பண அதிகாரத்தினைக் கட்டுப்படுத்துவதிலும், அரசியல் நிதியில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவருவதிலும் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது என்று அமைச்சர் கூறினார். பணப் பரிவர்த்தனைகளை ஊக்கமிழக்கச் செய்யவும், அரசியல் நிதி ஆதாரங்களில் வெளிப்படத்தன்மையைக் கொண்டுவரவும் அரசாங்கமானது வருமான வரிச் சட்டத்தில் பெயரிடப்படாத ரொக்க நன்கொடைகளின் அளவானது அதிகபட்சமாக ரூ. 2000 மட்டுமே என திருத்தம் செய்துள்ளது என்று சொன்னார்.
இந்தியாவில் அரசியல் நிதியில் வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்த அரசாங்கமானது 2018 இல் நன்கு நிறுவப்பட்டத் தணிக்கைச் சுவடுகளுடன் தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கேள்வி என்னவெனில், அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்களின் மாற்றங்கள், குறிப்பாக தேர்தல் பத்திரங்கள் அரசியல் நிதியில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர உதவியுள்ளதா என்பதே ஆகும். அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வாறு நிதியைப் பெறுகின்றன என்பதைச் சற்றுக் கூர்ந்து நோக்கினால், இந்தத் தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதற்குப் பதிலாக, அரசியல் நிதியுதவி பெறுவதை மென்மேலும் இரகசியமாகவும், அது நன்கு நிறுவப்பட்டிருக்கும் பெரும் அரசியல் கட்சிகளுக்குச் சாதகமாகவும் ஆக்கிவிட்டது. புதிதாக நிறுவப்பட்டுள்ள சிறிய பிராந்தியக் கட்சிகள் பாதமான நிலைக்குள்ளாகிவிட்டன.
ஜனவரி 2018ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்கும் புதிய அமைப்பானது பரிந்துரைப்பது என்னவெனில், எந்த இந்தியக் குடிமகனோ அல்லது இந்தியாவிலுள்ள எந்த நிறுவனமோ பாரத ஸ்டேட் வங்கியால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதின் கிளைகளிலிருந்து ஆயிரம், பத்தாயிரம், ஒரு இலட்சம், பத்து இலட்சம், ஒரு கோடி என்ற பிரிவுகளில் வழங்கப்படும் தேர்தல் பத்திரங்களை வாங்கி அவர்கள் சொந்த விருப்பப்படி அவர்கள் தெரிந்துகொள்ளும் கட்சிகளுக்கு பதினைந்து நாட்களுக்குள் தானம் செய்ய முடியும் என்று பரிந்துரை செய்கின்றது. அந்தப் பத்திரங்களைப் பணமாக மாற்றும் அரசியல் கட்சிகளானது மிகச் சமீபத்திய சட்டப்பேரவைகளுக்கான அல்லது பொதுத் தேர்தலில், வாக்களிக்கப்பட்டுள்ள மொத்த வாக்குகளில் குறைந்தபட்சமாக ஒரு சதவிகித வாக்குகளாவது பெற்றிருத்தல் வேண்டும். இது பொதுவான ஆதரவும் நன்கு நிறுவப்பட்டதுமான அரசியல் கட்சிகளுக்கு ஒரு விளிம்பினைக் கொடுக்கின்றபோது, ஒரு சதவிகித வாக்குகளைப் புதிதாக பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பெறுவதென்பது எளிதில்லை என்பதால் இந்த நிபந்தனை அந்தக் கட்சிகளுக்கு ஒரு சவாலை விடுகிறது.
தேர்தல் பத்திரமானது அரசியல் நிதியில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரக்கூட உதவவில்லை. சட்டப்படி அந்தப் பத்திரங்களை அரசியல் கட்சிகளுக்கு வழங்குபவர்களின் அடையாளத்தினை இரகசியமாக வைத்துக் கொள்ளவேண்டும். அரசியலில், கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த உதவுவதற்குப் பதிலாக, அடையாள இரகசியத் தன்மையானது, தனிப்பட்ட நபர்கள் அல்லது நிறுவனங்கள் தங்களிடமுள்ள கறுப்புப் பணத்தினை அரசியல் கட்சிகளுக்கு தானம் செய்வதின் மூலம் கறுப்புப் பணத்தைத் திசைமாற்றிக் கொள்ள ஊக்கமளிக்கிறது. கடந்த சில வருடங்களில், தேர்தல் நடைமுறைகளைச் சீர்செய்வதற்குப் பதிலாக, அந்த நடைமுறைகளை வெளிப்படத்தன்மையற்றதாக்க அவைகளில் ஒளிபுகாதபடி மேலும் அடைத்துப் போட்டுவிட்டது.
உண்மையான சீர்திருத்தம் என்பது குறைந்த அளவில் மட்டுமே செய்யப்பட்டது. வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத் திருத்தத்தின்படி அரசியல் கட்சிகள் வெளிநாட்டு நிதியுதவியைப் பெறுவதென்பது ஒரு ஆபத்தான முன்னேற்றமாகும். அப்படிப்பட்ட வழிகளிலிருந்து வரும் பங்களிப்பானது இயல்பாகவே சந்தேகத்திற்குரியவையாக இருக்க முடியும். மேலும் அந்த நிதியுதவி அளிப்பவரின் அடையாளத்தையும் மூடி மறைக்கக் கூடியதாகவும் இருக்கிறது. காலப்போக்கில், வெளிநாடுகளிலிருந்து நம் நாட்டிற்கு வரும் பணமானது, நம்முடைய அரசியல் அமைப்பையே மறைமுகமாக பாதிப்படையச் செய்யலாம்.
தேர்தல் நடைமுறைகளைச் சீர்திருத்துவதற்கான நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்களிலுள்ள ஓட்டைகள் மற்றும் குறைபாடுகளானது, தேர்தலில் பண வலிமையின் பங்கினைக் கட்டுப்படுத்துவதில் உள்ள சவால்களை மட்டுமே வெளிச்சம்போட்டுக் காட்டுகிறதாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்களானது, அரசியல் கட்சிகளுக்கு மாநில நிதியுதவி அளிக்கும் செயல்பாட்டிலுள்ள நீண்டகால வாதங்களையும் அதைச் சுற்றியுள்ள கருத்துக்களையும் மட்டுமே மீண்டும் மேலெழும்பச் செய்ய உதவி செய்துவிட்டது. இந்த நிரந்தர வாய்ப்பினை நாம் தேர்தல் அரசியலைச் சீர்திருத்துவதற்கான ஒரு பரந்த விவாதப் பொருளாகக் கருதவேண்டும். மீண்டும் மீண்டும் பல அரசியல் கட்சிகளானது தேர்தல் சீர்திருத்தங்களுக்கான அவர்களது உறுதிப்பாட்டினை தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே வந்தாலும், சீர்திருத்தப்பட வேண்டிய தற்போதைய அமைப்பானது அவர்களை பயனடையச் செய்வதால், அதைச் சீர்திருத்துவதற்கான அவர்களின் அற்பணிப்பு குறைவாகவே உள்ளது.
தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் ஏதேனும் ஒன்று இறுதியில் அரசாங்கத்தை அமைத்து மக்களுக்கான கொள்கைகளை உருவாக்குவதால், வாக்காளர்களுக்கு அரசியல் நிதி ஆதாரங்களை அறிந்துகொள்ளும் உரிமை இருக்க வேண்டும். அரசியல் நிதி ஆதாரங்களைக் குறித்ததான இப்படிப்பட்டதொரு வெளிப்படைத்தன்மை இல்லாத நிலையில், அரசாங்கமானது தங்களுக்கு நிதி நன்கொடையளித்த சில பெரிய வணிக நிறுவனங்களின் நலனுக்காகப் பணியாற்றுகிறது என்ற குற்றச்சாட்டு அடிக்கடி முன்வைக்கப்படுகிறது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியானது, அரசாங்கம் அதை ஆதரிக்கும் தொழில்துறை நிறுவனங்கள் மூலம் இயக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்குள்ளானது. ஆனால், அதையடுத்து ஆறு ஆண்டுகள் கழிந்தும் காரியங்கள் மாறிவிட்டதாகத் தோன்றவில்லை.
ஊடகத்துறை ஆய்வுகளுக்கான மையம் நடத்திய ஆய்வின்படி, 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவு செலவழித்தபடியால், அதுவே அதிக விலையுயர்ந்த தேர்தலாகக் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது பதவியிலிருக்கும் பாரதிய ஜனதா கட்சி மட்டுமே, கடந்த தேர்தலின் மொத்தச் செலவீனங்களில் கிட்டத்தட்ட 45 சதவிகிதம் செலவளித்திருக்கிறது என்ற கணக்கீட்டால், தேர்தல்களில் போட்டியிடுவதில் பணம் ஒரு கருவியாக உள்ளது என்பது எப்பொழுதைக் காட்டிலும் இப்பொழுது வெளிப்படையாகத் தெரியவருகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் அரசியல் பிரச்சாரத்திற்காக செலவு செய்ய நிர்ணயிக்கப்பட்டத் தொகையின் வரம்பானது 80 லட்சம் ரூபாயாகும். இந்த வரம்பினை ஏறத்தாழ அனைத்து தீவிர வேட்பாளர்களும் மீறிவிட்டனர். தற்போது, முழு அரசியல் அரங்கமும் மில்லியனர்கள் பணத்திற்கு எதிராக பண பலம் என்ற விளையாட்டினை விளையாடும் ஒரு பிரத்தியேக மண்டலமாகிவிட்டது. தற்போதைய நடைமுறையானது, முறையாகக் கண்கானிக்கவும், மதிப்பீடு செய்யவும், வேட்பாளர்களையும், கட்சிகளையும் அதற்கு பொறுப்புள்ளவர்களாக்கவும் தவறிவிட்டது. மற்றும், தேர்தல் பத்திரங்களானது இந்தத் திசைநோக்கி எந்த விதத்திலும் உதவாமற் போய்விட்டது.
விரிவான தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியமாயிருக்கிறது. அவைகளில் அரசியல் நிதியின் வெளிப்படைத்தன்மை என்பது ஒன்றாகும். பொறுப்புடைமை மற்றும் வெளிப்படைத் தன்மை என்பது ஜனநாயக முறையின் இரட்டைப் பண்புகளாகும். மற்றும், அரசியல் நிதியானது அதற்கு அந்நியமானதாக இருக்கக் கூடாது. மீறுபவர்களைத் தண்டிக்கத் தக்கதான போதிய அதிகாரங்கள் பெற்ற ஒரு ஒழுங்குமுறை அமைப்பு இல்லாவிடில், இது சாத்தியமாகாது. அந்த பட்சத்தில், பண வலிமை படைத்தவர்களுக்கு மட்டுமே தேர்தலானது ஒரு பெரும் அரசியல் விளையாட்டுக் களமாக நிலைத்திருக்குமேயன்றி பணம் குறைவாக உள்ளவர்களை அது வெறும் விளிம்பில் மட்டுமே நிறுத்திவிடும்.
சஞ்சய் குமார்
தேர்தல் அரசியல் ஆய்வாளரான இவர் டெல்லியில் உள்ள வளரும் சமூகங்களின் (CSDS) ஆய்வு மையத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார்
நீல் மாதவ்
CSDS ஆராய்ச்சித் திட்டத்துடன் இணைந்து செயல்படும் டெல்லி பல்கலைக்கழக இதழியல் மாணவி
இதையும் படிங்க : 'உடற்பருமன் குறித்து தெரிந்து கொள்வோமா!'