"வாழ்க்க இப்படியே போயிடுமோனு பயமா இருக்கு சார்…", என்று தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் பேசும் இந்த டயலாக்கை கடந்து வரதா ரசிகர்களே இருக்க மாட்டார்கள் எனலாம். மற்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானாலும், தோனி படத்தில் இடம்பெற்ற இதுபோன்ற காட்சிகளின் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான நடிகரானார் சுஷாந்த்.
டிவி சீரியலில் இருந்து மெய்ன் ஸ்ட்ரீம் வந்த பிரபல நடிகர்களின் வரிசையில் சுஷாந்த் சிங்கும் ஒருவர். தனது முதல் படமான கை போச்சே (kai po che) படத்தில் நடிப்பின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் சுடெசி ரொமன்ஸ், பிகே, டிடெக்டிவ் பியோம்கேஷ் பக்ஷி படத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது 2016இல் வெளியான தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி படம்தான்.
ரசிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக திகழும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தோனியாக சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிக்கிறார் எனப் படக்குழு அறிவித்தது. அப்போது தோனியின் கதாபாத்திரத்தை இவர் பூர்த்தி செய்வாரா, என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வியெழுந்தது.
அதற்குப் பதிலளிக்கும் விதமாகவே அவர் தோனியின் பாடி லாங்குவேஜ், மேனரிசம், பேட்டிங் ஸ்டைல், அவரின் சிறுசிறு அசைவுகள் என அந்தப் படத்தில் தோனியாகவே வாழ்ந்திருந்தார். ரசிகர்கள் பெரும்பாலும் அவரைத் தோனியாகவே திரையில் பார்த்து ரசித்தனர். படத்தில் தோனியாக வாழ அவர் 13 மாதங்கள் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டார். அதற்கான பலனும் அவருக்குக் கிடைத்தது. அந்த ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பாலிவுட் நடிகர் என்ற பெருமையையும் இவர் பெற்றார்.
அதன்பிறகு ரப்தா, வெல்கம் டூ நியூ யார்க், கேதர்நாத், சன்சிரியா ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சிச்சோர் படம் ரசிகர்களுக்கு தங்களது கடந்த கால கல்லூரி வாழ்க்கையைப் புரட்டிப்பார்க்க செய்தது.
துறுதுறுப்பான கல்லூரி மாணவராகவும், பொறுப்பான தந்தையாகவும் இருவேறு கதாபாத்திரங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். தனது கடைசி படமான சிச்சோரில் "தற்கொலை ஒரு நிரந்தர தீர்வு இல்லை" எனக் கூறிய சுஷாந்த், இன்று தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டது, யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
34 வயதில் மன அழுத்தம் காரணமாக அவர் எடுத்த இந்தத் திடீர் முடிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே இர்பான் கான், ரிஷி கபூர் ஆகியோரை இழந்து வாடும் பாலிவுட்டுக்கு இவரது இழப்பு மேலும் மீளமுடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதியாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடந்த ஜூன் 2 ஆம் தேதியன்று தனது அம்மாவின் நினைவு நாள் குறித்து மிக ஆழமான கவிதை ஒன்றினைப் பதிவிட்டிருந்தார்.