ஆந்திர மாநிலத்தில் காலியாக இருந்த நான்கு மாநிலங்களவை உறுப்பினர்களின் இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், மாநில துணை முதலமைச்சர், அமைச்சர் உள்ளிட்ட நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதையடுத்து, ஐந்து துணை முதலமைச்சர்களில், ஒருவருக்கான இடம் காலியாக இருந்ததையடுத்து, கடந்த புதன்கிழமை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தனது அமைச்சரவையில் சில மாறுதல்களை அறிவித்தார்.
அதன்படி, நரசண்ணபேட்டா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, சாலைகள் மற்றும் கட்டடத் துறை அமைச்சராக இருந்த தர்மனா கிருஷ்ண தாஸ் துணை முதலமைச்சராக பதவி உயர்த்தப்பட்டார்.
இதையடுத்து, ஐந்து துணை முதலமைச்சர்களில் ஒருவராக இருந்த பில்லி சுபாஷ் சந்திரபோஸ் (தற்போது மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளார்) நிர்வகித்து வந்த வருவாய், பத்திரப் பதிவு மற்றும் முத்திரைகள் துறை கிருஷ்ண தாஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கிருஷ்ண தாஸ் கவனித்து வந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இலாகா எம்.சங்கரா நாராயணாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சராக தர்மனா கிருஷ்ண தாஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.