மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக்கான பொது கவுன்சில் மறுஆய்வுக் கூட்டம் டெல்லியில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக்கான பொது கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) இயக்குனர் சேகர் மண்டே மற்றும் 38 அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது, “புதிய கரோனா வைரஸான கோவிட்-19க்கு போர்க்கால அடிப்படையில் துரிதமாக செயல்பட்டு ஆராய்ச்சியாளர்கள் தீர்வு (மருந்து) கண்டறிய வேண்டும்“ என்று ஹர்ஷவர்தன் வலியுறுத்தினார்.
மேலும், “இது ஒரு போர்க் காலம். இந்தப் போர் முடியும் முன்னர் நம் அறிவியலாளர்கள் தீர்வினை கொடுக்க வேண்டும். இது ஒரு சாதாரண ஆய்வு அல்ல. அதுபோல் யாரும் கருதவேண்டாம்.
புதிய கரோனா வைரஸ் (கோவிட்-19) நாட்டின் தன்னம்பிக்கைக்கு ஊக்கமளிக்கிறது. முக்கியமாக, சுகாதார உபகரணங்களை உருவாக்குவதில் உள்நாட்டு திறனை மேம்படுத்துகிறது.
நாம் இதுதொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்திவருகிறோம். புதிய கரோனா (கோவிட்-19) பாதிப்பாளர்களின் துணிகள், மரபணுகள் உள்ளிட்டவையும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
ஆகவே நோய்க்கான மக்கள் பாதிப்பைக் கண்டறிவதிலும் மரபணு வரிசைமுறை மிகவும் முக்கியமானது. இந்த மரபணு வரிசைமுறை முயற்சிகள் 26 ஆண்டுகளுக்கு முன்பு போலியோ ஒழிப்பு இயக்கத்தை நினைவூட்டுகிறது” என்றார்.
நாட்டில் நெருக்கடி நேரத்தில், இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்துக்கான 15 ஆய்வகங்கள் முக்கிய தொழில்கள், பொதுத்துறை நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்கள் மற்றும் பிற துறைகள் அமைச்சகங்களுடன் நெருங்கிய கூட்டுறவில் செயல்படுகின்றன.
இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி (சி.எஸ்.ஐ.ஆர்) தேசிய விண்வெளி ஆய்வகங்கள் முப்பரிமாண (3டி) தொழில்நுட்ப முகக் கவசங்கள், கவுன் உள்ளிட்ட பிற உபகரண பொருட்களை உருவாக்கிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.