நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாள்களாகத் தீவிரமடைந்து வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நாள்தோறும் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15ஐ தொட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தை ஒட்டியுள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, அங்கு பொது நிகழ்வுகளில் 50க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அங்குள்ள முக்கியப் புனிதத் தலமான ஹரித்வாரில் இன்று ஹர் கி பவுரி என்ற சிறப்பு கங்கை ஆரத்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மக்கள் பெரியளவில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என அரசு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், அங்கு வழக்கம் போலவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமியிருந்தனர்.
இது குறித்து அங்குள்ள தலைமை பூசாரி, ”மக்களிடம் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ச்சியாக அரசு சார்பிலும், கோயில் நிர்வாகம் சார்பிலும் தொடர்ச்சியாகத் தெரிவக்கப்பட்டது. இருப்பினும் பக்தர்கள் யாரும் முகக் கவசம் அணியாமல், எப்போதும் போல கங்கை ஆரத்திக்கு வந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தென்கொரியாவில் கட்டுக்குள் வரும் கரோனா வைரஸ் தொற்று?