புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமாக பாசிக் மற்றும் பாப்ஸ்கோ நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இந்த நிறுவனங்கள் மூலம் அரசு பெட்ரோல் பங்க், காய்கறி விற்பனையகம், மருந்தகம் உள்ளிட்டவை இயங்கின. நாளடைவில் நலிவுற்றதால் இந்நிறுவனத்தை முடக்கி செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதில் பணிபுரிந்த 500க்கும் மேற்பட்டோர் வேலையின்றி பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 10) புதுச்சேரி ஏஐடியுசி பாசிக் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் சங்கத் தலைவர் ராஜூ தலைமையில் சட்டப்பேரவை முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. அதில், நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும், மூடப்பட்ட இந்த நிறுவனங்களை அரசு தொடர்ந்து நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டது.
முன்னதாக, கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் மிஷின் வீதி வழியாக சட்டப்பேரவையை நோக்கி வந்தனர். அவர்களை காவல் துறையினர், மாதா கோயில் அருகே தடுப்புகளை போட்டு நிறுத்தியதால் போராட்டக்காரர்கள் அங்கு தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதில் ஏஐடியூசி மாநில பொது செயலாளர் சேதுசெல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், மாநிலத் தலைவர் தினேஷ் பொன்னையா, பாசிக் மற்றும் பாப்ஸ்கோ தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.