ஆந்திர மாநிலத்தில் 2014ஆம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்டார். அப்போது கிருஷ்ணா நதிக்கரையில் புதிய வீடு ஒன்றைக் கட்டி குடியேறினார். இதையடுத்து அவர் ஆட்சியிலேயே ரூ. 5 கோடி மதிப்பில் 'பிரஜா வேதிகா' என்ற கட்டடத்தைக் கட்டி, கட்சியினர் முக்கியக் கூட்டங்களை நடத்த பயன்படுத்தி வந்தார். இதற்கு அப்போது எதிர்கட்சியாக இருந்த ஒய்எஸ்ஆர் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்நிலையில் தற்போது நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார். இதையடுத்து சந்திரபாபு நாயுடு, அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் 'பிரஜா வேதிகா' கட்டடத்தை தானே தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதனை ஜெகன்மோகன்ரெட்டி அரசு மறுத்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து சமீபத்தில் ஜெகன்மேகான்ரெட்டி தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் பிரஜா வேதிகா கட்டடத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர், பிரஜா வேதிகா கட்டடம் சட்ட விதிகளை மீறி கிருஷ்ணா நிதிக்கரையில் கட்டப்பட்டுள்ளது என்பதால் அதை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம்தான் இந்தக் கட்டடத்தில் நடக்கும் கடைசி கூட்டமாகும் என்றார். அதைத்தொடர்ந்து இந்தக் கட்டடம் நேற்றிரவு இடிக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் பல ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் உள்ள நிலையில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கட்டிய பிரஜா வேதிகா கட்டடம் மட்டும் இடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'இசட் பிரிவு' பாதுகாப்பு விலக்கல்:
இதைப்போல் சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தினருக்கான பாதுகாப்பை ஜெகன்மோகன் ரெட்டி அரசு குறைத்துள்ளது. குறிப்பாக சந்திரபாபு நாயுடுவின் மகனும், முன்னாள் அமைச்சருமான நர லோகேஷுக்கு வழங்கி வந்த 'z பிரிவு' பாதுகாப்பை விலக்கி, நான்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் மட்டுமே பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.