ஹைதராபாத்: நமது ஈடிவி பாரத் செய்திகளுக்காக மூத்த ஊடகவியலாளர்கள் சுமிதா சர்மா, முகேஷ் அகி ஆகியோர் அமெரிக்க-இந்திய மூலோபாய கூட்டு மன்ற (US-India Strategic Partnership Forum) தலைவர், தலைமை செயல் அலுவலர் (CEO), முக்கியத் தலைவர்களை பிரத்யேகமாக சந்தித்து உரையாடினார்கள். அப்போது,
- இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தகத்திலிருக்கும் தடைகள்,
- அண்டை நாடுகள் முதலீட்டை ஈர்ப்பது எப்படி?
- இந்தியாவில் வணிகத்துக்கு உள்ள தடைகள், ஜம்மு-காஷ்மீர் விவகாரம்
எனப் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசப்பட்டது. அப்போது மூத்த பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமெரிக்க-இந்திய மூலோபாய கூட்டு மன்ற தலைவர்கள் அளித்த பதில்கள் வருமாறு:
கேள்வி: தற்போது இந்திய-அமெரிக்க உறவு எவ்வாறு உள்ளது? இரு தரப்புக்கும் மிகப்பெரிய சவாலாக இருப்பது எது?
- பதில்: இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்திலிருந்து வர்த்தக ஒப்பந்தத்தை பிரிக்க வேண்டும். இந்த ஆண்டு வர்த்தகம் 142 பில்லியன் டாலரிலிருந்து 160 பில்லியன் டாலராக உயரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தியாவுக்கான அமெரிக்க ஏற்றுமதி 30 விழுக்காடு அதிகரித்துள்ளது.
- ஒட்டுமொத்த வர்த்தகம் 16 விழுக்காடு உயர்ந்துள்ளது. இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் பெரும்பாலும் இரட்டை இலக்க வளர்ச்சியைக் காட்டுகின்றன. ஆக ஒட்டுமொத்த வர்த்தகம் சிறப்பாக உள்ளது. நாம் செய்ய வேண்டியது வர்த்தக ஒப்பந்தத்தை முடிப்பதாகும். தற்போது இதுகுறித்த புரிதல் உள்ளது. ஆகவே வர்த்தக ஒப்பந்தம் விரைவில் முடிவுக்கு வரும். நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்துக்குள் எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் இருக்க வேண்டும்.
கேள்வி: வரையறுக்கப்பட்ட ஒப்பந்தத்தை தடுக்கும் முக்கிய வேறுபாடுகள் என்னென்ன?
- பதில்: சில சிகப்புக் கோடுகள் உள்ளன. ஆப்பிள், பாதாம் ஏற்றுமதிக்கும் அமெரிக்க சில சிகப்புக் கோடுகளை (தடைகள்) கொண்டுள்ளது. இருவரும் சரியான சமநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும். அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goyal), லைட்டிஸரின் (Lighthizer) அணுகுமுறை இதனை நிவர்த்தி செய்யும் என்று நினைக்கிறேன்.
கேள்வி: நீங்கள் அமெரிக்க வர்த்தகத் தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்தீர்கள். அப்போது என்னென்ன பகிரப்பட்டன?
- பதில்: எங்கள் தரப்பில் அதிக முதலீடு செய்ய ஆர்வமுள்ள வணிகர்கள் உள்ளனர். இந்தியா நம்பிக்கைக்குரிய சந்தை என்று செய்திகள் கிடைக்கின்றன. இந்தியாவின் ஒவ்வொரு அம்சத்திலிருந்து நாம் இரட்டிப்பாக்க வேண்டும். இன்னும் ஐந்து அல்லது 10 ஆண்டுகளில் இந்தியா ஐந்து டிரில்லியன் அமெரிக்க டாலர் சந்தையாக மாறும். அதில் நாங்களும் பயணிக்க விரும்புகிறோம்.
- பிரதமர் நரேந்திர மோடி, 'எங்களிடம் ஜனநாயகம், நீங்கள் பயன்படுத்தக்கூடிய மூளை (டிமாக்) இருக்கிறது' எனத் தெரிவித்தார். இந்தியாவில் மக்கள் எளிமையாக வாழ வேண்டும், மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும் என்பதை விரும்புகிறார். அவரிடம் ஒரு நேர்மையான உரையாடல் இருந்தது. எங்களின் உறுப்பு நிறுவனங்கள்கூட, இந்தியாவில் முதலீடு செய்வதில் ஆர்வமாக உள்ளன.
கேள்வி: இருநாட்டுத் தலைவர்களிடம் சில குழப்பங்களும் விமர்சனங்களும் தென்படுகின்றன. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
- பதில்: நான் அவ்வாறு நினைக்கவில்லை. பேச்சுவார்த்தையில் லைட்டிஸர் (Lighthizer) போலவே பியூஷ் கோயலும் புத்திசாலி. ஆகவே இதுபற்றி கவலைகொள்ளத் தேவையில்லை.
கேள்வி: பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்க பயணத்துக்கு முன்னதாக, அமெரிக்க உறுப்பினர்கள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு மறுசீரமைப்புக் கோரி கடிதம் எழுதினர். இது எந்த வகையில் உள்ளது? இது இந்தியாவுக்கு ஏதேனும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துமா?
- பதில்: அமெரிக்காவுக்கு இந்தியாவின் ஏற்றுமதியைப் பொறுத்தவரை, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் சம்பந்தப்பட்ட நடைமுறைகள் (Generalised System of Preferences) ஜி.எஸ்.பி. தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு இல்லை.எனினும் ஜி.எஸ்.பி. மீண்டும் அட்டவணைக்குள் வருவதை உறுதிப்படுத்தும் வகையில் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். ஆக இது மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளது. இதில் சில மாற்றங்கள் இருக்கலாம்.
கேள்வி: அமெரிக்க- சீன வர்த்தகப் போரினால் இந்தியா பயனடையக்கூடும் நிலையில் உள்ளதா?
- பதில்: வரிகளைக் குறைப்பதன் மூலம் இந்தியா சில மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த மாத இறுதியில் 17 விழுக்காடு புதிய உற்பத்தி வரிவிலக்குகளை பெறலாம். தொழிலாளர், நிலச் சீர்த்திருத்தம் குறித்து இந்தியா மேலும் முன்னேற வேண்டும். ஆனால் 200-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் உறுப்பினராக உள்ளன. அவர்கள் இந்தியா மீது தீவிரமான பார்வையை செலுத்துகின்றனர்.
- இந்நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் உற்பத்தியை நகர்த்துவதற்காக 21 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளன. இந்தியா ஒரு உற்பத்திச் சூழல் மட்டுமல்ல. சீனா தனது சந்தையை மூடுவதால், அது இந்தியாவுக்குச் சாதகமாக இருக்கும் என நம்புகிறேன். வணிகக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, உற்பத்தி செல்லும் வரையில் இந்தியாவுக்கு இன்னும் அதிக லாபத்தை கொடுக்கும்.
கேள்வி: இந்த நிறுவனங்கள் ஏன் இந்தோனேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்குச் செல்கிறது? இந்தியா இன்னும் என்ன செய்ய வேண்டும்?
- பதில்: ஒட்டுமொத்த இந்தியாவைப் பார்க்கும்போது அவர்கள் வர வேண்டியவர்கள்தான். ஆனால் சவால் என்னவென்றால் அவர்களை சமாதானப்படுத்த முயற்சிப்பதுதான். அவர்களின் பிரச்னை என்னவென்பதை இந்திய அரசுதான் புரிந்துகொள்ள வேண்டும். வணிகத்தை எளிதாக்குவதில் இந்தியா 77ஆவது இடத்தில் உள்ளது. ஆனால் சீனா 26ஆவது இடத்தில் உள்ளது. ஆக ஒரு மிகப்பெரிய இடைவெளி உள்ளது. அதனை இணைக்கும் ஒரு பாலம் வேண்டும். அதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
கேள்வி: ஹவுஸ்டன் பேரணி (ஹவுடிமோடி) 2020 அமெரிக்க அதிபர் தேர்தலுக்குக்கான பரப்புரை என்று கணிக்கின்றனரே? இந்தக் கணிப்பு சரிதானா?
- பதில்: நான் அவ்வாறு நினைக்கவில்லை. கடந்த தேர்தலில் டெக்சாஸில் குடியரசுக் கட்சிக்கு (டொனால்ட் ட்ரம்ப்) 14 விழுக்காடு இந்தியர்கள் மட்டுமே வாக்களித்தனர்.
கேள்வி: அப்படியென்றால் குடியரசுக் கட்சியின் பரப்புரைக் குழுவால் இது தவறாகச் சித்திரிக்கப்பட்டதா?
- பதில்: ஒருவேளை பிரதமர் நரேந்திர மோடியை அவர்கள் தங்கள் சொந்த நிகழ்ச்சிக்காகப் பயன்படுத்த நினைத்தார்கள் என்று நினைக்கிறேன்.
கேள்வி: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்கு பிறகு முதலீட்டுக்கான அணுகல் எவ்வாறு உள்ளது?
- பதில்: ஜம்மு-காஷ்மீரில் முதலீட்டை அறிய அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளது. ஜம்மு-காஷ்மீர் சிறந்த சுற்றுலாத் தலம். அங்கு முதலீடு கருத்தரங்கம் நடப்பதைக் காண்பீர்கள். ஆனால் அதனை சிலர் சுரண்ட முயற்சிக்கின்றனர். 70 ஆண்டுகள் சச்சரவு சம்பவங்கள் நடந்த காஷ்மீரில், கடந்த 70 நாள்களாக அமைதி நிலவுகிறது.
- ஆகவே காஷ்மீர் ஒரு இடைக்கால அல்லது நீண்டகால அமைதியைக் காண்கிறது. ஆனால் இறுக்கத்துடன் என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. தகவல் தொடர்புகள் மீட்டெடுக்கப்படுவதை நாங்கள் காண்கிறோம். அமெரிக்க நிறுவனங்கள் அங்கு முதலீடு செய்ய ஆர்வமாகவுள்ளன. எதிர்காலத்தில் பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதையும் படிங்க: அமெரிக்க குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு