ஹைதராபாத்தைச் சேர்ந்த அரசு பெண் மருத்துவர், நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு வீடு திரும்பினார். அப்போது, அவரின் இருசக்கர வாகனத்தை லாரி ஓட்டுநர், கிளீனர் உள்ளிட்ட நால்வர் பஞ்சர் செய்துவிட்டு, அதனை சரி செய்து தருவதுபோல் நாடகமாடி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கினார். பின்னர், அவரை எரித்து கொலை செய்தனர்.
முன்னதாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில், காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ஹைதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நவம்பர் 28ஆம் தேதி ஒரு பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கிடப்பது தெரியவந்துள்ளது. பின்னர், காவல் துறையினர் எரிக்கப்பட்ட உடலை மருத்துவரின் தங்கைக்கு காட்டினர். சில அடையாளங்களைக் கண்டு, எரிக்கப்பட்டது தன்னுடைய அக்கா என்பதை மருத்துவரின் தங்கை அடையாளம் காட்டினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், நால்வரும் திட்டமிட்டு பாலியல் வன்புணர்வு செய்து உடலை எரித்ததை ஒப்புக் கொண்டனர்.
இந்நிலையில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கிட வேண்டும் எனக் கோரி சாத்நகர் அருகே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாரணையின்றி குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், மாணவர்கள் உள்ளிட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருக்கும் காவல் நிலையம் அருகே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹைதராபாத் மருத்துவர் கொலை வழக்கு: நால்வருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!