சமூக வலைதளங்களில் காட்டுத்தீபோல் பரவிய காணொலி ஒன்று டெல்லியிலும் வைரலானது. நெஞ்சை பதைபதைக்கச் செய்யும் அந்தக் காணொலிக் காட்சி, திருமண வீட்டில் எடுக்கப்பட்டது. உறவினர்களும், குடும்பத்தினரும் திருமணக் கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்க, இரண்டு இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டு விளையாடினர். இந்தக் காணொலிக் காட்சிகளை பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து பதிவிட்டிருந்தனர்.
மேலும் இது டெல்லி காவல்துறை பார்வைக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதில், இந்தக் காணொலி, நேற்று முன்தினம் (அக்.7) கர்தாம்புரி பகுதியில் நடந்த திருமண விழாவில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர்கள் சல்மான்(21) மற்றும் சவாஜ் மாலிக்(18) என்பவர்களாவர்.
சவாஜ் மாலிக்கின் மூத்த சகோதரர் ஷோயப் மாலிக் திருமணக் கொண்டாட்டத்தின்போது இந்த விபரீதம் அரங்கேறியுள்ளது. இதையடுத்து ஆயுதத் தடுப்பு, மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தலில் இருந்து தடுத்தல் (ஐபிசி 336) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், சல்மான் மற்றும் சவாஜ் மாலிக்கை கைது செய்தனர்.
மேலும் கொண்டாட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட நாட்டுத் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து நாட்டுத் துப்பாக்கி எங்கிருந்து வந்தது? இவர்களுக்கு கொடுத்தது யார் என்ற கோணங்களில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.