டெல்லியில் பண்டிகை காலம், சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட காரணங்களால் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 15.26 விழுக்காடு அதிகரித்திருப்பதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டெல்லியில் நேற்று ஒரே நாளில் ஏழாயிரத்து 745 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நான்கு லட்சத்து 38 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 41 ஆயிரத்து 857 மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 79 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் அதிகரித்துவரும் காரணத்தால் டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை மூன்றாயிரத்து 878 ஆக அதிகரித்துள்ளது.
பண்டிகை காலம், காற்றின் மாசு அளவு அதிகரித்தல் ஆகிய காரணங்களால் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அக்டோபர் 25 ஆம் தேதி துர்கா பூஜை கொண்டாட்டங்கள் முடிவடைந்த நிலையில், தீபாவளி, சாத் பூஜை முறையே நவம்பர் 14, 20 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படவுள்ளது.
டெல்லியில் கரோனாவின் மூன்றாவது அலையின் உச்சத்தை எட்டியுள்ளது என்றும், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான மக்கள் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அம்மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். மேலும், கரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கு மக்களின் அலட்சியப்போக்கே காரணம் என்றும் அவர் கூறினார்.
கரோனா எண்ணிக்கை அதிகரித்துவருவதை கருத்தில்கொண்டு நகர மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகளின் எண்ணிக்கையை மாநில அரசு அதிகரித்துள்ளது.
வரவிருக்கும் குளிர்காலம், சுவாச தொடர்புடைய பிரச்னைகள், பண்டிகை ஆகியவற்றை கணக்கில்கொண்டு, வரும்காலங்களில் தினசரி சுமார் 15,000 பேர் டெல்லியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தேசிய நோய்களுக்கான கட்டுப்பாட்டு மையம் சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில் எச்சரித்திருந்தது.