கரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக 50 விழுக்காடு பயணிகள் எண்ணிக்கையுடன் பல்வேறு மாநிலங்களிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதன்படி டெல்லியிலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடனேயே பேருந்து சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பரவல் கடந்த சில வாரங்களாக டெல்லியில் தொடர்ந்து குறைந்துவருவதால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
வரும் நவம்பர் 8ஆம் தேதி வரை டெல்லியில் சோதனை முறையில், முழு பயணிகள் எண்ணிக்கையுடன் பேருந்து சேவை செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லி போக்குவரத்துக் கழகத்தின் நடத்துனர் ஒருவர் கூறுகையில், "கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பயணிகளை எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. மேலும், பெண்களிடம் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது" என்றார்.
இருப்பினும், கரோனா பரவல் முழுமையாக குறையாத நிலையில் அரசின் இந்த முடிவால் கரோனா பரவல் மோசமாகலாம் என்றும் ஒரு சாரார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி செல்லும் கேரளா - ராகுல் பாராட்டு