டெல்லி மாளவியா நகரில் உள்ளது பண்டிட் மதன் மோகன் மாளவியா அரசு மருத்துவமனையில் பிறந்த சுமார் ஒரு கிலோ எடையுள்ள குழந்தையை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.
அப்போது, அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு சுவாச உதவி அளிப்பதற்காக வெண்டிலேட்டர் ஏதும் இல்லாததால் குழந்தை பிறந்த சிலமணி நேரங்களிலேயே இறந்தது.
இதனால் ஆத்திரமடைந்த குழந்தையின் உறவினர்கள் குழந்தைகள் மருத்துவரை தாக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மருத்துவர் மற்றும் செவிலியர்களை சிறைபிடித்து வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மருத்துவமனையில் போதிய அளவு படுக்கைகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் இருப்பு இல்லை. இதையறிந்ததால், தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை மாற்ற மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கிடையில், குழந்தையை பொது பிரிவிற்கு மாற்றவுள்ளதாகவும், இதற்கு குழந்தையின் உறவினர்கள் சம்மதம் தெரிவிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதற்கு குழந்தையின் உறவினர்கள் சம்மதிக்க மறுத்த வந்த நிலையில் குழந்தை உயிரிழந்தது என்றார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாகப் பேசிய அப்பகுதியின் எம்எல்ஏ சோம்நாத் பாரதி, "அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு (ஐ.சி.யூ) வசதி ஏதும் இல்லாத காரணத்தினாலே குழந்தை இறந்துள்ளது. பிரசவ வார்டில் ஏராளமான பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போதிய படுக்கை வசதியும் ஏற்படுத்தப்படவில்லை. இதனைக் கருத்தில்கொண்டு இந்த ஆண்டு இறுதிக்குள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: 'வென்டிலேட்டர் இணைப்பை நீக்கிவிட்டார்கள்' - உயிரிழப்பதற்கு முன் தந்தைக்கு காணொலி அனுப்பிய மகன்!