டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்கு டெல்லி போக்குவரத்துக் கழகம், மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையும் நடத்தியது.
சில மாதங்களில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டெல்லி முதலமைச்சர் இந்தத் திட்டத்தை அறிவித்ததால் இது குறித்து பல்வேறு கட்சியினரும் விமர்சனம் செய்தனர். எனினும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்துவருகிறார்.
இதனால் டெல்லி அரசு மெட்ரோ நிர்வாகத்திடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த தங்களுக்கு எட்டு மாத கால அவகாசம் தேவை என்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், 'மெட்ரோ மேன்' என்றழைக்கப்படும் டெல்லி மெட்ரோ நிர்வாகத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீதரன், டெல்லி அரசின் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதை அனுமதித்தால் நாட்டில் உள்ள பிற மாநிலங்களிலும் இந்தக் கோரிக்கை எழுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே இந்தக் கோரிக்கையை ஏற்கக் கூடாது என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் டெல்லி அரசு இத்திட்டத்தை செயல்படுத்தினால் டெல்லி மெட்ரோ இழப்பைச் சந்திக்கும். எனவே டெல்லி அரசு இலவச சேவைக்கான கட்டணத்தை பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தலாம். டெல்லி மெட்ரோ நிர்வாகத்தைப் பொறுத்தவரையில், அதன் தலைமை நிர்வாக இயக்குநரும் பயணச்சீட்டு பெற்றுதான் பயணம் செய்துவருகிறார்.
முன்னதாக 2002ஆம் ஆண்டு டெல்லி மெட்ரோ திறக்கப்பட்டபோது, அப்போதைய பிரதமர் வாஜ்பாயும் பயணச்சீட்டு வாங்கியே பயணம் மேற்கொண்டார் எனக் குறிப்பிட்ட அவர், இந்த விஷயத்தில் தலையிட்டு பிரதமர் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
ஸ்ரீதரன், 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலில் கடுமையாக சேதமடைந்த பாம்பன் ரயில் பாலத்தை 46 நாட்களில் சீரமைத்து பிரபலமடைந்தார். அது தவிர கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களை இணைக்கும் கொங்கன் ரயில்வேயை வடிவமைப்பதில் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
மேலும், கொல்கத்தா, டெல்லி, கொச்சி உள்ளிட்ட மெட்ரோ பணிகள் பல்வேறு கட்டுமானங்களுக்கு தலைமை வகித்துள்ளார். இதனால் இவரை 'மெட்ரோ மேன்' என்று அழைத்துவருகின்றனர். இவர் டெல்லி மெட்ரோவின் தலைமை நிர்வாக இயக்குநராக 1995 முதல் 2012ஆம் ஆண்டு வரை பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.