டெல்லியை அடுத்த ஜஹாங்கிர்புரியைச் சேர்ந்தவர் தப்ரேஸ் கான். கடந்த மார்ச் 18ஆம் தேதி அன்று இவருக்கு கோவிட் -19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக அறியமுடிகிறது.
அதனைத் தொடர்ந்து, மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த அவர் ஏப்ரல் 5 ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்த காலக்கட்டத்தில் பிளாஸ்மா தெராபி மூலமாக புதிதாக பாதிக்கப்படும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறையை மருத்துவ உலகம் கண்டறிந்தது.
இதனிடையே, ஆபத்தான நிலையில் உள்ள சக மனிதர்களின் நிலையை எண்ணி கலங்கிய கான் தனது ரத்த பிளாஸ்மாக்களை தானம் வழங்கி உதவ முன்வந்துள்ளார்.
தொடர்ந்து ஒன்பது 9 முறைகளைக் கடந்த அவர் தனது பிளாஸ்மா தான வழங்கல் பணியை மேற்கொண்டுவந்திருக்கிறார்.
டெல்லியின் முதல் பிளாஸ்மா நன்கொடையாளரான அவரே அதிக முறை தானம் வழங்கிய நபர் என்ற அடையாளத்தையும் பெற்றிருக்கிறார்.
இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய கான்," ஒன்பது முறை பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்கியதில் என்னைப் பற்றி நானே பெருமைப்படுகிறேன்.
இது பல உயிர்களைக் காப்பாற்ற உதவியதாக மருத்துவர்கள் சொல்வதைக்கேட்டு எல்லையற்ற மகிழ்வை அடைகிறேன்.
உன்னதமான காரணத்திற்காக நான் இதை செய்திருப்பதை நினைக்கும் போது நான் மிகவும் திருப்தியும், மகிழ்ச்சியும் அடைகிறேன். எனது பங்களிப்பும் இந் நாட்டில் பல உயிர்களைக் காப்பாற்றுகிறது என்று நினைப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
நாடு முழுவதும் மக்கள் அதிகளவு பாதிக்கப்படுவதால் பிளாஸ்மா நன்கொடை அதிகமாக தேவைப்படுவதால் அதிக எண்ணிக்கையில் பலரும் முன்வந்து தானம் வழங்க வேண்டும்.
கரோனா தீநுண்மியிலிருந்து மீண்டு வருபவர்கள் அனைவரும் நன்கொடை அளிக்க வேண்டும். இது எந்த பலவீனத்தையும் ஏற்படுத்தாது." என கூறினார்.