கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் கரோனா பரவல் குறைந்துவருகிறது. இதற்கு நேர்மாறாக டெல்லியில் கரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரித்துவருகிறது.
மீண்டும் டெல்லியில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், "டெல்லி முகவரியைப் பயன்படுத்தி வெளி மாநிலத்தவர்களும் இங்கு கரோனா பரிசோதனையை எடுத்துக்கொள்கின்றனர்.
யாரிடமும் பரிசோதனை செய்ய வேண்டாம் என்று எங்களால் கூற முடியாது. இதன் காரணமாகத்தான் டெல்லியில் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டெல்லியில் பரிசோதிக்கப்படும் மாதிரிகளில் கிட்டத்தட்ட 25-30 சதவீத மாதிரிகள் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுடையவை.
டெல்லியில் கோவிட்-19இன் மூன்றாவது அலை ஏற்கனவே உச்சத்தை தொட்டுவிட்டது. தற்போது கரோனா பரவல் மெள்ள குறைந்துவருகிறது. மாநிலத்தில் கரோனா சிகிச்சைக்காக 16 ஆயிரத்து 500 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் எட்டாயிரம் படுக்கைகள் தற்போது காலியாக உள்ளன" என்றார்.
டெல்லியில் தற்போது 40 ஆயிரத்து 128 பேர் கரோனா காரணமாக சிகிச்சை பெற்றுவருகின்றனர். நான்கு லட்சத்து 41 ஆயிரத்து 361 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர், மேலும் ஏழாயிரத்து 713 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: ”தேச நலனுக்கு எதிரான கூட்டணியை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்” - அமித் ஷா