காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் தயாரித்த 12 ஹெலிகாப்டர்களை குடியரசு தலைவர், பிரதமர் போன்ற வி.வி.ஐ.பிகளுக்கு வாங்க முடிவு செய்து, 2010ஆம் ஆண்டு 3600 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை பெற இந்திய அமைச்சர்களுக்கு கிறிஸ்டியன் மிசேல் மூலம் லஞ்சம் அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, டெல்லி நீதிமன்றத்தில் இதுகுறித்து சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை வழக்கு தொடர்ந்தன.
இதில் குற்றம்சாட்டப்பட்ட கிறிஸ்டியன் மிசேல் இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க இந்தியாவுக்கு துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டார். இந்நிலையில், ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் கிறிஸ்டியன் மிசேல் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த சிறப்பு நீதிபதி அரவிந்த், ஜாமீன் வழங்க போதுமான முகாந்திரம் இல்லை எனக் கூறி அவருக்கு பிணை வழங்க மறுத்துவிட்டார்.