டெல்லியில் இயங்கி வரும் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் இரண்டு புதிய வளாகங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. ரோஹினி, தீர்பூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற இந்த விழாவில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், ‘பொருளாதார மந்த நிலையை சமாளிக்க உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று முழு நம்பிக்கை உள்ளது. நாடு ஒன்றாக நின்று பொருளாதாரத்தை சரிசெய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை உள்ளது. வேலைவாய்ப்பின்மை குறித்து தனிப்பட்ட முறையில் வேதனையாக இருக்கிறது. வாகனத்துறை, ஜவுளி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் பணிபுரிவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். இந்த மந்த நிலை பிற துறைகளுக்கும் வெகுவாக பரவுவதை நாம் காண்கிறோம். பொருளாதாரத்தை சரிசெய்ய எந்த நடவடிக்கை எடுத்தாலும் டெல்லி அரசு அவர்களுக்கு முழு ஆதரவையும் அளிக்கும்’ என்று கூறினார்.