லடாக் எல்லையில் இந்திய-சீன பாதுகாப்புப் படையினருக்கு இடையே கடந்த ஒன்றரை மாதமாகவே மோதல் போக்கு நிலவிவுருகிறது.
இதன் காரணமாக இருநாடுகளும் தத்தமது படைகளை அங்கு குவித்துள்ள நிலையில், ஜூன் 15ஆம் தேதி சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன படையினர் பயங்கர கைகலப்பில் ஈடுபட்டனர்.
இதில் இந்தியத் தரப்பைச் சேர்ந்த 20 வீரர்கள் படுகாயங்களுடன் வீரமரணமடைந்தனர். இந்தச் சம்பவம் எல்லை பதற்றத்தை உச்சத்துக்குக் கொண்டுசென்றது.
இதையடுத்து, ஜூன் 22ஆம் தேதி இருதரப்பு கமாண்டர்கள் இடையே நடந்த முக்கியப் பேச்சுவார்த்தையில், எல்லைப் பகுதிகளிலிருந்து படைகளை விலக்கிக்கொள்ள பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதனை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதனால் எல்லை மோதல் படிப்படியாகத் தணியும் என எதிர்பார்க்கப்பட்டுவந்த வேளையில், அதற்குத் தீங்குவிளைவிக்கும் வகையில் சீனப் படையினர் மோதல் நடந்த கல்வான பள்ளத்தாக்குக்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், அவர்கள் அங்கு ராணுவ கூடாரம், கண்காணிப்பு கோபுரங்களை அமைத்துள்ளதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இது இந்திய-சீன எல்லைப் பதற்றத்தை மீண்டும் உச்சத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது.
இதையும் படிங்க : இருநாட்டுப் படைகள் மோதிக்கொண்ட இடத்திற்கு வந்த ராணுவத் தளபதி!