கிழக்கு லடாக்கின் பாதுகாப்பு நிலவரம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தளபதி பிபின் ராவத், ராணுவ தலைமைத் தளபதி நரவனே, கப்பற்படை தலைமைத் தளபதி கரம்பீர் சிங், இந்திய விமானப் படை தளபதி பாதுரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.
கிழக்கு லடாக் எல்லைப் பாதுகாப்புக்கான அனைத்து அம்சங்களும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், எல்லையில் நிலைமைகளை கையாளுவதில் எதிர்கால அணுகுமுறை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைகளை தீர்ப்பதில் சீனா ஆர்வம் காட்டவில்லை என்று இந்திய ராணுவம் மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து இந்த ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.
சீனாவுடனான பேச்சுவார்த்தையின் போது, ஏப்ரல் மாதம் சீனப்படைகள் இருந்த நிலைக்குச் செல்லவேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியதால் பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், உண்மையான கட்டுப்பாட்டு எல்லையை மாற்றுவது ஏற்கத்தக்கதல்ல என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
சீனா-இந்தியாவுக்கு இடையேயான எல்லைப் பிரச்னையை தீர்க்க கடந்த இரண்டரை மாதங்களாக பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'அரசின் பணம் திருடப்பட்டுள்ளது'- ரஃபேல் குறித்து ராகுல்!