டெல்லியில் நடுநிசி இரவில் ஓடும் பேருந்தில் நிர்பயா கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நால்வரில் வினய் சர்மாவும் ஒருவர்.
இந்நிலையில் இவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் தேதி குறித்துவிட்டது. அதற்கான நீதிமன்ற கறுப்பு உத்தரவு கடந்த 7ஆம் தேதி அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அதன்படி நால்வருக்கும் வருகிற 22ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில் குற்றவாளிகளின் கடைசி சட்ட ஆயுதமான, 'கடைசி நிவாரண மனு'வை வினய் சர்மா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "என்னுடைய மரணம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழித்துவிடும் என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த மனு குறித்த வினய் சர்மாவின் வழக்குரைஞர்கள் ஆதீஷ் அகர்வால், ஏ.பி. சிங் ஆகியோர் கூறும்போது, “இந்த வழக்கில் மனுதாரர் மட்டும் பாதிக்கப்படமாட்டார். அவரின் குடும்பம் ஆர்.கே. புரம் ஹரிஜன் பாஸ்தி பகுதியில் வசித்துவருகிறது. அவருடைய தந்தை மிகமிக ஏழ்மையானவர். அவர்களிடம் எந்தவித சேமிப்புப் பணமும் கிடையாது. ஏற்கனவே இந்த குற்றவழக்கு தொடர்பாக ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை. இருப்பினும் சமூக புறக்கணிப்பை எதிர்கொள்கின்றனர்” என்றனர்.
நீதிமன்ற உத்தரவின்படி நிர்பயா பாலியல் கொலை வழக்கு குற்றவாளிகள் நான்கு பேருக்கும் வருகிற 22ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. 2012 டிசம்பர் 16ஆம் தேதி 23 வயது பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். இந்தக் குற்ற வழக்கில் ஒருவர் பதின்ம வயதுடையவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளிச் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
மீதமுள்ள ஐந்து பேர் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் ஒருவர் சிறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மரண தண்டனை அளித்தது.
இந்த தண்டனைக்கு எதிராகத் தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் 2014ஆம் ஆண்டு தண்டனையை உறுதி செய்தது. தொடர்ந்து உச்ச நீதிமன்றமும் 2017ஆம் ஆண்டு தண்டனையை உறுதி செய்தது.
இந்நிலையில் அவர்கள் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது வினய் சர்மா, உச்ச நீதிமன்றத்தில் கடைசி நிவாரண மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நிர்பயா குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் கடைசி நிவாரண மனு!