கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறில் உள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக கட்டித் தரப்பட்ட கட்டடம் கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட்.6) இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணில் புதைந்தது. இவ்விபத்தில் 80க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் என அறியப்பட்ட நிலையில், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
தற்போதுவரை விபத்தில் சிக்கி 55 பேர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. சுமார் 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். பெட்டிமுடி பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டது. இருப்பினும், மாநில மற்றும் தேசிய அளவிலான பேரிடர் மீட்புப் பணிக் குழுவைச் சேர்ந்த வீரர்கள் தொடர்ந்து ஆறாவது நாளாக இன்றும் முழுவீச்சில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.