இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயருக்கு பயங்கரவாத அமைப்பினரிடம் இருந்து கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 75 வயதான மாதவன் நாயர், கடந்த 2009ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வுத்துறையின் தலைவராகப் பதவி வகித்துள்ளார். ஜீ.எஸ்.எல்.வி செயற்கைக்கோள் வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய இவர் விண்வெளித் துறையில் மேற்கொண்ட சாதனைக்காக பத்ம விபூஷன் விருதுபெற்றுள்ளார்.
நேற்று, மாதவன் நாயருக்கு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளிடம் இருந்து மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதையடுத்து உடனடியாக கேரள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அத்துடன், தடயவியல் அதிகாரிகள் கடிதத்தைத் தீவிரமாக சோதித்து வருகின்றனர். அண்மையில் காஷ்மீர் தீவிரவாத தாக்குதல், இந்திய விமானப்படைத் தாக்குதல், மிஷன் சக்தி சோதனை ஆகியவை நடந்ததைத் தொடர்ந்து இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.