அயோத்தி வழக்கு பல காலமாக நீதிமன்ற வாசலில் தீர்ப்புக்காக காத்து கொண்டிருக்கிறது. இரு மதங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் வழக்கை சமரசமாக முடித்து வைக்க உச்ச நீதிமன்றம் பல முயற்சிகளை எடுத்தது. இறுதி முயற்சியாக மத்தியக் குழுவை உருவாக்கி இரண்டு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் தெரிவித்த கருத்துகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது.
ஆனால், இதில் மத்தியக் குழுவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ராமர் கோயில் கட்ட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ராம் லல்லாவின் வழக்கறிஞர் பரசரான் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், "சர்ச்சைக்குரிய பகுதி மட்டும் ராமர் பிறந்த இடமில்லை, அதனைச் சுற்றியுள்ள மொத்தப் பகுதியும் புனிதமானவை. அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை. ஆனால், இந்துக்கள், இஸ்லாமியர்கள் ஆகிய இருவரும் சர்ச்சைக்குரிய பகுதியை புனிதமானது எனக் கருதுகின்றனர்" என்றார்.