காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதிக்கான சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த மாதம் 5ஆம் தேதி ரத்து செய்தது. ஜம்மு-காஷ்மீர் பிரிக்கப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் தோற்றுவிக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த முடிவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை எழுந்துள்ளது.
பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் அம்மாநிலம் கொண்டுவரப்பட்டுள்ளதை அடுத்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திவிட்டதாக பல்வேறு எதிர்க்கட்சியினரும் குற்றஞ்சாட்டிவருகின்றனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா ஆகியவை கடும் எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றன. ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இவ்விவகாரம் பற்றி பாகிஸ்தான் அரசு இந்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்தது.
இந்த நிலையில், சிறப்புத் தகுதி நீக்கப்பட்டு இன்றோடு 39 நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை இயல்புநிலை திரும்பவில்லை. பள்ளிகள் மூடப்பட்டுக்கிடக்கின்றன. ஒரு சில தனியார் வாகனங்கள் மட்டுமே இயங்குகின்றன. அரசுப் போக்குவரத்துச் சேவை முடங்கியுள்ளது.
அன்றாட தேவைகளுக்கான சந்தைகள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பள்ளிகளை திறக்க மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் போதிய பலனை அளிக்கவில்லை. பெற்றோர் தங்களது குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி பள்ளிகளுக்கு அனுப்ப மறுக்கின்றனர். பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் சூழலையே இது காட்டுகிறது.
முன்னதாக, காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்களான ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்டோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் குறித்து எந்தவிதத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்று அரசியல் கட்சியினர் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
மேலும், ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத் தரக்கோரி மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை எம்பியுமான வைகோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.