உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்புகள் உச்சத்தை அடைந்துள்ளன. நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனைக் கட்டத்தில் உள்ளன. இந்நிலையில், மவுத்வாஷ் பயன்படுத்துவதன் மூலம் கரோனா பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம் என ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து ஜெர்மனியின் ருர் யுனிவர்சிட்டட் போச்சம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டோனி மீஸ்டர் குழுவினர் நடத்திய ஆய்வில், "மவுத்வாஷ் பயன்படுத்தி வாய் கொப்பளிப்பது, தொண்டையில் வைரஸ் உற்பத்தியைத் தடுக்காது. ஆனால், சிறிது நேரம் வரை வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் செயல்படுகிறது. இதனால், வைரஸ் தொண்டை வழியாகப் பரவுவது சிறிது நேரம் வரை கட்டுப்படுத்தப்படுகிறது. இதை உறுதிப்படுத்த எட்டு வகையான மவுத்வாஷ்கள் கொண்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
வாய் கொப்பளிக்கும் விளைவை உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் இந்தச் சோதனையை நடத்தியுள்ளனர். மவுத்வாஷ்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்காகவும், வைரஸ் பயன்பாட்டை கணக்கிடவும் செல் கலாச்சார வழிமுறையை ஆய்வுக் குழுவினர் பயன்படுத்தியுள்ளனர்.
இப்பரிசோதனையின் முடிவில், அனைத்து மவுத்வாஷ் தயாரிப்புகளும் சிறிது நேரம் வரை வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்துவது தெரிய வந்தது. குறிப்பாக மூன்று மவுத்வாஷ்களில், வாய் கொப்பளித்தல் செயல்முறைக்குப் பிறகு வைரஸை சிறிது நேரம் முற்றிலுமாக செயலிழக்க வைக்க முடிந்தது தெரிய வந்தது.
”ஆய்வின் முடிவில், கரோனா தொற்றுக்கு மவுத்வாஷ் சிறந்த சிகிச்சை கிடையாது, ஆனால் அதே சமயம் கரோனா பாதிப்பைக் குறைக்க முடிகிறது. இருமல் மூலமாக கரோனா பரவலை சிறிது நேரத்திற்கு தடுக்க முடிகிறது” என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.