தென்கிழக்கு அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை இன்றைக்குள் (ஜூன் 2) புயலாக உருவெடுத்து ஜூன் 3ஆம் தேதி மகாராஷ்டிரா (வடக்கு), குஜராத் (தெற்கு) ஆகிய மாநிலங்களில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அரபிக் கடலில் உருவாகிவரும் இந்தப் புயலுக்கு நிசார்கா என்று பெயரிடப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்கு இடையே, மே மாதம் மேற்கு வங்கம், ஒடிசாவைப் புரட்டிப்போட்ட ஆம்பன் புயலைத் தொடர்ந்து இந்தியாவைத் தாக்கவரும் இரண்டாம் புயல் இதுவாகும்.
நிசார்கா புயல் குறித்து இதுவரை நமக்குத் தெரிந்த விவரங்கள்:
- மும்பையிலிருந்து சுமார் 630 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு அரபிக்கடலில் இந்தக் காற்றழுத்த தாழ்வுநிலை நிலைகொண்டுள்ளது.
- இது இன்று (ஜூன் 2) மதியத்துக்குள் புயலாக மாற்றம் பெற்று, நாளை (ஜூன் 3) ஹரிஹரேஷ்வர், தாமன் அருகே கரையைக் கடக்கவுள்ளது.
- அப்போது மணிக்கு 90-100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் ஜூன் 3-4 தேதிகளில் மகாராஷ்டிரா, குஜராத்தின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
- ஜூன் 4ஆம் தேதி நிசார்கா புயல் வலுவிழந்து 45-55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
- ஜூன் 3, 4 ஆகிய தேதிகளில் அரபிக் கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 24 குழுக்கள் மகாராஷ்டிரா, குஜராத்தில் முகாமிட்டுள்ளன.
இதையும் படிங்க : ஜார்ஜ் ஃப்ளாய்ட், குடும்பத்தினருக்கு நீதி பெற்றுத் தருவோம் - ட்ரம்ப்