வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆம்பன் புயல் நேற்று (மே 20) மாலை மேற்கு வங்கம் - வங்கதேசத்துக்கு இடையே கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு 190 கி.மீ வேகம் வரை பலத்த காற்று வீசியதுடன், கனமழை பெய்ததால் மேற்கு வங்கம் மாநிலம் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதாவது, "ஆம்பன் புயல் பாதிப்பு காரணமாக ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்ட பகுதிகள் அனைத்தையும் மீண்டும் மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மத்திய அரசு அரசியல் செய்யாமல் மனிதாபிமானத்தோடு உதவ வேண்டும்.
மாநிலத்துக்கு இடையேயான இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், இழப்பு குறித்த தகவல்களை சேகரிக்க குறைத்தது மூன்று முதல் நான்கு நாள்கள் ஆகும். முதல்நிலை மதிப்பீடுகளின்படி, 12 பேர் வரை இந்த புயலால் உயிரிழந்ததாக தெரிகிறது. கரோனா தொற்று நோயால் ஏற்பட்ட உயிரிழப்பை விட இந்த புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: மே மாத பங்கீட்டு தொகை 46,038.70 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு விடுவிப்பு-நிதி அமைச்சகம்