நாட்டில் மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்த விரிவான அறிக்கையை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் முதியவர்களுக்கு எதிரானக் குற்றச் செயல்கள் 2018ஆம் ஆண்டைக் காட்டிலும் 2019ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது.
2018ஆம் ஆண்டில் முதியவர்களுக்கு எதிராக 23 ஆயிரத்து 501 குற்றச்செயல்கள் பதிவான நிலையில், 2019ஆம் ஆண்டில் அது 26 ஆயிரத்து 562ஆக உயர்ந்துள்ளது. இதில் 6 ஆயிரத்து 163 குற்றச்செயல்களுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்து 4 ஆயிரத்து 184 எண்ணிக்கையுடன் மத்தியப் பிரதேசம் இரண்டாமிடத்திலும், 4 ஆயிரத்து 88 குற்றச்செயல்களுடன் குஜராத் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
அதேவேளை, தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கையானது குறைந்துள்ளது. 2018ஆம் ஆண்டு 3 ஆயிரத்து 162ஆக இருந்த நிலையில், 2 ஆயிரத்து 509ஆக குறைந்துள்ளது. கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரப்படி நாட்டில் சுமார் 16 கோடிக்கும் மேற்பட்ட முதியவர்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. முதியவர்களுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'ஆட்சி நடத்தும் அருகதையை யோகி அரசு இழந்துவிட்டது!'