பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அகதிகளாக இந்தியா வந்துள்ள சிறுபான்மையினரான முஸ்லிம் அல்லாதோருக்கு எளிதில் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்யும் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த மசோதா மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதாவுக்கு ஆதரவு கிடைத்த நிலையில், நேற்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மசோதா சட்டமாக்கப்பட்டது.
இந்த நிலையில் மசோதாவுக்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையில் அண்டை மாநிலமான கேரளத்திலும் மசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதுமட்டுமின்றி அம்மாநிலத்தில் முன்மாதிரியாக ஒரு சம்பவமும் அறங்கேறி உள்ளது. அதாவது முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியினர் காங்கிரஸின் தேசிய முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்த போராட்டம் வருகிற திங்கட்கிழமை (டிச.16) அன்று நடக்கிறது. அன்றைய தினம் நடைபெறவுள்ள போராட்டத்தில் எதிர்கட்சி தலைவரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதாலாவுடன் இணைந்து முதலமைச்சர் பினராயி விஜயனும் கலந்து கொள்கிறார்.
முன்னதாக இருகட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் சந்தித்துக் கொள்ளும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில்தான் வரலாற்று சிறப்பு மிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் காங்கிரசும், இடதுசாரிகளும் இரு துருங்களாக அரசியலில் கோலோச்சுபவர்கள்.
மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மக்களுக்கு ஆதரவான போராட்டங்களால் அறியப்பட்டவர். இவர் கல்லூரி படிக்கும்போது அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அப்பேது காவலர்கள் இவரை லாக்-அப்பில் வைத்து அடித்து துவைத்தனர்.
அதே வேகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வென்ற பினராயி விஜயன், ரத்தம் தோய்ந்த தனது சட்டையுடன் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை வலிமையானது. மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்திய உரை அது. அவ்வாறு தான்கொண்ட கொள்கையில் மிக உறுதியாக இருக்கும் தலைவர் பினராயி விஜயன். எனினும், நாட்டில் நிலவும் அசாதாரண நிலையை சமாளிக்கவே, காங்கிரசுடன் கைக்கோர்க்க அவர் சம்மதித்துள்ளார்.
கேரளத்தை பொறுத்தமட்டில் காங்கிரசும், இடதுசாரிகளும் (மார்க்சிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட்) இணைந்த வரலாறு கிடையாது. தமிழ்நாட்டில் உள்ள திமுக-அதிமுக போன்று தேர்தலை தனித்தே சந்தித்து வந்தன. தற்போது வரலாறு திரும்பி உள்ளது. அந்த வகையில், இரு கட்சிகளுக்கு இடையே இருந்த இரும்பு திரை விலகி உள்ளது.!
இதையும் படிங்க : கேரள வங்கி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் பினராயி விஜயன்!