அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். அவரைப் பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையம் சென்று வரவேற்றார். இந்நிலையில், அவரின் வருகையை எதிர்க்கும் விதமாக சிபிஐ கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா, “அமெரிக்க பொருளாதாரம் கடும் நெருக்கடியில் உள்ளது. பொருளாதாரத்தை முன்னேற்றப்பாதைக்கு எடுத்துச் செல்ல புதிய சந்தையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சந்தர்பத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா போன்ற நாடுகள் பெரிய சந்தையாகத் தெரிகிறது. இங்கு ஏற்கனவே பொருளாதாரம் மிகவும் நலிந்து காணப்படுகிறது. விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பால் பண்ணை, கோழிப்பண்ணையை நம்பியிருப்பவர்கள் அச்சத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
இந்தியா, அதிக அளவு வர்த்தகம் செய்யும் நாடுகளில், சீனா முதலிடத்தில் இருந்துவந்தது. தற்போது, அமெரிக்கா அந்த இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில், இந்த சந்திப்பு இருநாட்டுக்கும் இடையில் இன்னும் அதிகமான வர்த்தக நெருக்கத்தை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“அமெரிக்காவின் பெயரில் ஏகாதிபத்தியத்தை ட்ரம்ப் உலகமெங்கும் பரப்புகிறார். அமெரிக்கா ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்தத் தடையினால் இந்தியாவுடன் ஈரான் தனிப்பட்ட முறையில் சுதந்திரமான வர்த்தகத்தை நடத்த முடியவில்லை. இதன் காரணமாக ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க முடியாது” என அமெரிக்காவினை ஏகாதிபத்திய நாடாகக் குற்றம் சாட்டுகிறார், சிபிஐயின் பொதுச் செயலாளர்.
இதையும் படிங்க: இந்தியாவுடன் 300 கோடி டாலர் ராணுவ ஒப்பந்தம் - ட்ரம்ப் அறிவிப்பு