புதுச்சேரியில் கரோனா வைரஸ் பெருத்தொற்று பரவாமல் தடுப்பதற்கு உள்ளாட்சித் துறை எடுத்து வரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது குறித்து உள்ளாட்சித் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. புதுச்சேரி உள்ளாட்சித் துறை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த நமச்சிவாயம், “புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. புதுச்சேரியில் இதுவரை யாருக்கும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
எந்த ஒரு கட்டத்திலும் எந்த ஒரு நிலையிலும் எந்த ஒரு நேரத்திலும் நோய்த்தொற்று புதுச்சேரியில் ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றது.
கரோனாவை எதிர்க்க மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் தற்சமயம் உள்ளாட்சித்துறை சார்பில் வசூலிக்கப்படும் சொத்து வரி, தொழில் வரி, குப்பை வரி வசூலிக்கப்பட மாட்டாது. மக்களின் அத்தியாவசிய தேவைக்காக அவசரக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் அனைவரும் அருகருகே அமர்ந்திருந்த புகைப்படத்தை ஆளுநர் கிரண்பேடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விமர்சனம் செய்திருப்பது தேவையில்லாத ஒன்றாகும். மக்களை பாதுகாக்க வேண்டிய தருணமிது.” என்றார்.
இந்த கலந்துரையாடலில் உள்ளாட்சி துறை இயக்குநர் மலர் கண்ணன், செயலர் அசோக்குமார், நகராட்சி ஆணையர்கள் சிவகுமார் , வருவாய் துறை அலுவலர் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : புதுச்சேரி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சம்பளத்தை அளித்த வி.சி.க எம்பிக்கள்!