வருமான வரி, தனி நபர் வரி தாக்கல், தொழில் மற்றும் தனி நபர் வரி தணிக்கை மற்றும் நிறுவனங்களின் வரி தாக்கலுக்கான தேதியை நவம்பர் 30 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதேபோல் முதலீடுகள் செய்வதற்கான வருமான வரிச் சட்டத்தின் வரி சேமிப்பு விதிகளை ஜூன் 30ஆம் தேதியிலிருந்து ஜூலை 31ஆம் தேதிக்கு நீட்டித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கரோனா சூழலில் வரி செலுத்துபவர்கள் சந்திக்கும் இடர்பாடுகளை மனதில் கொண்டு இதனை மார்ச் 30ஆம் தேதியிலிருந்து ஜூன் 30ஆம் தேதிக்கு முன்பே நீட்டித்திருந்தார். தற்போது மத்திய அரசு இதனை ஜூலை 31ஆம் தேதிக்கு நீட்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வரி சேமிப்பு பணிக்கான அத்தியாவசிய முதலீடுகளை செய்ய முடியாமல் தவிக்கும் வரி செலுத்துபவர்களுக்கு இதன்மூலம் முதலீடுகளை செய்ய மேலும் ஒரு மாத காலஅவகாசம் உள்ளது. இதன்மூலம் எல்ஐசி, பிபிஎப், என்பிஎஸ் உள்ளிட்டவற்றில் வரி சேமிப்பு முதலீடுகளை செய்ய முடியும் என மத்திய அரசு நம்புகிறது.
2018 -19 நிதியாண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்தாவர்கள், உண்மையான திருத்தப்பட்ட வருமான வரியை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 30 (2020) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கலின் மூன்று பிரிவுகளுக்கும் நவம்பர் 30ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்துள்ள அரசு, வரி தணிக்கைக்கான அறிக்கையை தாக்கல் செய்வதற்கு அக்டோபர் 31ஆம் தேதியே கடைசி நாள் என அறிவித்துள்ளது.
ஆதார் - பான் கார்டை இணைக்கும் தேதி நீட்டிப்பு:
மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளில், ஆதார் - பான் கார்டு இணைப்புக்கான தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆதார்-பான் கார்டு இணைப்புக்கான தேதி மார்ச் 31, 2021 என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுய மதிப்பீடு வரிக்கான கடைசி தேதியும் நீட்டிப்பு:
மத்திய நேரடி வரிகள் வாரியம், சுய மதிப்பீடு வரியை செலுத்த நவம்பர் 30 (2020) கடைசி தேதி என அறிவித்துள்ளது. ஆனால், சுய மதிப்பீடு வரி ரூ. 1 லட்சம் வரை உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் , ரூ. 1 லட்சத்துக்கு அதிகமாக சுய மதிப்பீடு வரி உள்ளவர்களுக்கு வரி செலுத்துவதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்படாது. இதில் உரிய தேதியில் வரி செலுத்தாதவர்களுக்கு, வருமான வரிச் சட்டத்தின் கீழ் வட்டி வசூலிக்கப்படும். காலதாமதமாக வரி செலுத்துபவர்களுக்கு வட்டியில் எந்த தள்ளுபடியும் கிடையாது.
அரசாங்கம் சில தளர்வுகளுக்கு அனுமதி அளித்திருந்தாலும், காலதாமதாக வரி செலுத்துபவர்களுக்கு 9% வட்டி வசூலிக்கப்படும். ஜூன் 30ஆம் தேதிக்குள் வரி செலுத்துபவர்களுக்கு இது பொருந்தாது என தெரிவித்துள்ளது.
மூலதன ஆதாய வரியில் தணிவு
வருமான வரி சட்டப் பிரிவு 54-இன் கீழ் முதலீடு செய்தல், லாபத்தில் பங்கு கேட்பதற்கு சொத்து வாங்குதல், மூலதன ஆதாயத்தில் கழித்தல் ஆகியவற்றுக்கான கடைசி தேதியை செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளது மத்திய நேரடி வரிகள் வாரியம்.
சிறப்பு பொருளாதார மண்டல பிரிவுகளில் தணிவு
நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், வருமான வரிச் சட்டப் பிரிவு 10ஏஏ-இன் கீழ் சிறப்பு பொருளாதார மண்டல பிரிவுகளின் இயக்கத்திற்கான தொடக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பொருளாதார மண்டல பிரிவுகள் இயங்க மார்ச் இறுதிக்குள் அனுமதி பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இதற்கான தேதி செப்டம்பர் 30 (2020) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விவாத் சே விஸ்வாஸ் திட்டத்தில் நீட்டிப்பு கிடையாது
விவாத் சே விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் கூடுதல் தொகையில்லாமல் கட்டணத்தை செலுத்துவோருக்கு டிசம்பர் 31 (2020) கடைசி தேதி என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பே அறிவித்திருந்ததை குறிப்பிட்டு, இதில் எந்த நீட்டிப்பும் கிடையாது என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.