சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், தற்போது ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட உலக நாடுகளைப் பயமுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இதனைத் தடுக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.
இந்தியாவில் கரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இதனால் அம்மாநிலத்தின் முக்கிய நகரங்களான மும்பை, புனே, நாக்பூர், பிம்ப்ரி, சின்ச்வாட் ஆகியவை வரும் 31ஆம் தேதி வரை முடக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மேலும், குடிநீர், மருந்தகங்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புனேவைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, கரோனா வைரஸ் தொற்று அவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மத்திய அரசையும், மகாராஷ்டிரா அரசையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஏனெனில், கரோனா வைரஸ் தொற்று என்பது பாதிக்கப்பட்டவர்களிமிருந்து மட்டும் தான் மற்றவர்களுக்கு பரவும். அதுவும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் வெளிநாடுகளுக்குச் சென்றுவந்தவர்களாகவே இருப்பதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர். ஆனால், இப்பெண் விவகாரத்தில் அவரோ அல்லது அவரின் குடும்பத்தினரோ வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை. இருப்பினும் அப்பெண்ணுக்கு வைரஸ் தொற்று எப்படி பரவியது என்பதைக் கண்டறிய முடியவில்லை.
இதுகுறித்து துணை மருத்துவ இயக்குநர் டாக்டர் ஜிதேந்திர ஓஸ்வால் கூறுகையில், ”கடந்த சில தினங்களுக்கு முன்பு வாஷி நகரில் நடந்த திருமண விழாவில் இப்பெண் கலந்துகொண்டுள்ளார். அங்கிருந்த யாரேனும் மூலம் கரோனா தொற்று அவருக்கு ஏற்பட்டதா என அலுவலர்கள் சோதனை செய்து வருகின்றனர். தற்போது, அந்தப் பெண் ஆபத்தான நிலையில், வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார். இவரை பற்றிய விவரங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன” என்றார்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 63 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறியுள்ளார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் இதுவரை 271 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 200 மி.லி. சானிடைசருக்கு அதிகபட்ச சில்லறை விலையாக ரூ.100 நிர்ணயம்!