இந்தியாவில் நிலவும் கரோனா சூழல் குறித்து விவாதிக்க இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜஷ் பூஷணும் கலந்துகொண்டார்.
இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை தரப்பில் , "மருத்துவர்கள், செவிலியர்கள் என நாட்டிலிருக்கும் ஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கு முதலில் கரோனா தடுப்பு மருந்தை வழங்க திட்டமிட்டுள்ளோம்.
அதன் பின்னர் காவல் துறையினர், பாதுகாப்பு படையினர், நகராட்சி ஊழியர்கள் என சுமார் இரண்டு கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பு மருந்தை வழங்க திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட எம்.பி.க்களைக் கொண்ட கட்சிகளுக்கு இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
கரோனா பரவல் தொடங்கிய பின்னர் நடைபெறும் இரண்டாவது அனைத்துக் கட்சி கூட்டம் இதுவாகும். இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்,
இதையும் படிங்க: ஒரு சில வாரங்களில் கரோனா தடுப்பூசி கிடைக்கும் - பிரதமர் மோடி