உலகெங்கும் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக, இந்தியாவில் தற்போதுதான் இந்தத் தொற்று தீவிரமடைந்துள்ளது. வைரஸ் பரவல் குறித்து அறிந்துகொள்ள பல்வேறு நாடுகளிலும் பல ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டுவருகின்றன. அதன்படி, ஒடிசா தலைநகர் புவனேஷ்வரிலுள்ள ஐஐடி மற்றும் எய்ம்ஸ் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், பருவமழை மற்றும் குளிர்காலத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை, வெப்பநிலை குறைவு, வளிமண்டலத்தில் ஏற்படும் குளிர்ச்சி ஆகியவை கரோனா வேகமாகப் பரவ சாதகமாக அமையக்கூடும் என்று புவனேஷ்வர் ஐஐடியின் காலநிலை அறிவியல் பிரிவின் உதவிப் பேராசிரியர் வினோஜ் தலைமையிலான நடத்தப்பட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.
'இந்தியாவில் கரோனா பரவலுக்கும் வெப்பநிலைக்கும் உள்ள சம்பந்தம்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த அறிக்கையில், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 28 மாநிலங்களில் கரோனா பரவலின் நிலை குறித்து விளக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உதவிப் பேராசிரியர் வினோஜ் கூறுகையில், "எங்களின் ஆரம்பக்கட்ட ஆய்வில் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைப் பொறுத்து கரோனா பரவல் அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது. வெப்பநிலையில் வெறும் ஒரு டிகிரி செல்சியஸ் உயர்வு என்பது வைரஸ் இரட்டிப்பாகும் விகிதத்தை 1.13 நாள்கள் வரை அதிகரிக்கிறது" என்றார்.
மேலும், அதேபோல வரும் காலங்களில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் பருவமழை மற்றும் குளிர்காலங்களில் கரோனா தொற்று வேகமாகப் பரவும் அபாயம் உள்ளதாகவும், இந்தல் காலகட்டங்களில் வைரஸ பரவலைக் கட்டுப்படுத்துவதில் சுகாதாரப் பணியாளர்கள் பெரும் சவாலை எதிர்கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "மோடியின் போலியான பிம்பம் அவருக்கு பலம், ஆனால் நாட்டிற்கு..." - தாக்கும் ராகுல்